இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.14 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி இருதரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதை நிறுத்திவிட்டது. பயங்கரவாதிகளுக்குத் துணைபோவாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி இருநாட்டு தொடரை இந்திய அரசு புறக்கணிக்கிறது. இதனால் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் போட்டிகளில் கலந்துகொள்கின்றன.

இந்நிலையில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தந்தத்தின்படி, இரு தரப்பு தொடரை நடத்த இந்தியா மறுத்துவிட்டது. இதனால் ஏற்பட்ட இழப்புக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சுமார் ரூ.446 கோடி வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.

இதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. இந்த வழக்கை விசாரித்த ஐசிசி தீர்ப்பாயம் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தாங்கள் செலவு செய்த தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தர வேண்டும் என பிசிசிஐ ஐசிசி தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது.

இதில், பிசிசிஐ கேட்ட தொகையில் 60 சதவிகிதத்தை செலுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கிய குழுவின் செலவையும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும் ஐசிசி தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சுமார் 14 கோடி ரூபாயை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தண்டமாகச் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here