கோவை: ”தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள், கட்டுமானங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதிகாரிகள் துணையோடு நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும்,” என்று பா.ஜ., தேசிய துணைத்தலைவர் எச்.ராஜா கூறினார்.
கோவையில் அவர், ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:தமிழகத்தில், 44 ஆயிரத்து 190 கோவில்கள் இருந்தன. அதில், 5,544 கோவில்கள் அதிகாரிகள் முயற்சியால் அறநிலையத்துறை வசமிருந்து விடுவிக்கப்பட்டன. ஏனென்றால், இக்கோவில்களின் கட்டுப்பாட்டில் அசையாச் சொத்துக்கள், லட்சம் ஏக்கருக்கும் மேல் உள்ளன.ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமான, அசையும், அசையா சொத்துக்கள் குறித்து பட்டியலிட்டு சமர்ப்பிக்க, நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். ஆனால், இது வரை சமர்பிக்கவில்லை. அறநிலையத்துறை சட்டம், 29ன் படி, பெரும்பாலான கோவில்களில் சொத்துப்பதிவேடு பராமரிக்கப்படுவதில்லை.
பூந்தமல்லி திருக்கச்சிநம்பி கோவில் நிர்வாகம், கோவிலுக்கு சொந்தமாக சொத்துக்கள் இல்லை என்று, தகவல் அறியும் சட்டத்தில் பதில் அளித்தது. ஆனால், சிந்தாதிரிப்பேட்டை, சவுகார்பேட்டையில் கோவிலுக்கு சொந்தமான, 21 வீடுகள் இருந்தன. அதிலிருந்து மாதவாடகை, செக்குகளாக கோவிலுக்கு மாதந்தோறும் வரும். அவற்றை கோவிலுக்கான இரு வங்கிக்கணக்கு அல்லாமல், மூன்றாவதாக ஒரு வங்கிக்கணக்கு துவங்கி அதில் செக்குகளை சமர்ப்பித்து, அத்தொகையை அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர். 1999 முதல் தற்போது வரை, 10 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.
செய்யாறு அருகே உள்ள செங்குன்றான்குன்றில் கோவில் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கிறது. அதிலிருந்த, 23 சிலைகளில், ஆறு சிலைகள் திருடு போனது. மீதமுள்ள, 17 சிலைகளை மீட்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பினர். தஞ்சாவூரிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலிலுள்ள, பெரும்பாலான சிலைகள் போலியானவை. திருவாரூர் சிலை காப்பகத்தில் உள்ள, 5,000 சிலைகளில், 1,000 சிலைகள் போலியானவை. அறநிலையத்துறைக்கு சொந்தமான, 22 ஆயிரத்து 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து 675 மனை இடங்கள் உள்ளன. அவை, 28 கோடி சதுர கி.மீ., பரப்பு கொண்டவை.
அறநிலையத்துறையின் தற்போதைய கொள்கை விளக்க குறிப்பில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து 248 ஏக்கர் நிலம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1985ம் ஆண்டின் கொள்கை விளக்க குறிப்பில், 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அப்போது, 46 ஆயிரத்து 752 ஏக்கர் நிலம் எங்கே போனது? தமிழகத்தில் பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள், கட்டுமானங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதிகாரிகள் துணையோடு நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும்.சென்னை அடையாரிலுள்ள அருணாசலபுரத்தில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 554 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 75 சதவீதம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது.இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here