லண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தின் தனித்தன்மையை காப்பாற்றும் வகையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது. இதற்காக மக்களிடம் எடுக்கப்பட்ட ஓட்டெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று மக்கள் வாக்களித்தார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மீது அதிருப்தி நிலவி வருகிறது. அவரின் கட்சியான கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களே அவர் மீது அதிருப்தி தெரிவித்தனர். கன்சர்வேட்டிவ் கட்சி விதிகள்படி சொந்த கட்சி எம்.பி.க்களே பிரதமர் மீது கட்சி ரீதியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். அந்த அடிப்படையில் அவர் மீது கட்சிக்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. எனவே தெரசா மே பதவி தப்பியது.

ஐரோப்பிய யூனியன் விவகாரம் தொடர்பாக டிச. 11-ல் எம்.பி.க்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதை ஜன. 14-க்கு பிரதமர் ஒத்தி வைத்தார். இது எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் தெரசா மே மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி இப்போது தெரசா மே மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் ஜெரிமி கார்பி கூறுகையில்,”பிரதமர் தெரசா மே நாட்டு நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனவே அவர் பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார். இதனால் தான் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இங்கிலாந்தின் அனைத்து எம்.பி.க்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தீர்மானம் எப்போது ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் சொந்த கட்சி எம்.பி.க்களிலேயே பலர் தெரசா மேக்கு எதிராக இருப்பதால் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here